Sunday, April 12, 2009


ஈழத் தமிழர் தோழமைக் குரல்
லஷ்மி சரவணக்குமார்
(உன்னதம் – மார்ச் 2009 இதழின் பதிவுகள் பகுதி)
கலை இலக்கியத்தின் மாபெரும் சாதனைகளாய் எஞ்சியிருப்பவையெல்லாம் போராட்டங்களுக்கும் யுத்தங்களுக்கும் பின்னால் உருவானவைகளாகத்தான் முழுக்கப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. எழுதப்படுவதற்கான அல்லது பாடப்பெறுவதற்கான தேடலும் தீவிரமும் குருதி தோய்ந்த நாட்களினூடாகவே அதீதமாய் இன்றும் இருந்து வருகிறது. சமகாலத்தில் புறவுலகில் அனுபவிக்க நேர்கிற யுத்தமும் வன்முறையும் ஒரு படைப்பாளிக்கு அளிக்கும் நெருக்கடிகள் ஏராளம். இனப்போராட்டங்கள் இன்று உலக வரைபடத்தின் உருவத்தையே மாற்றியமைக்கக் கூடியவைகளாய் வந்திருப்பதன் நீட்சியை கொசாவா, காஸிம், ஈழம் என ஏராளமாக நாம் அடையாளப்படுத்திக் கொள்ள முடியும்.
மானுட விடுதலைக்காகவும், இனப்போராட்டங்களின் கலை, வரலாற்றுச் சிறப்புகளையும் பக்கம் பக்கமாக எழுதுவதற்கு தமிழ் படைப்பு வெளியில் ஆட்கள் இல்லாமலில்லை. ஆனால், சொந்த இனத்தைப் பற்றிய அக்கறை என்னவாயிருக்கிறதெனப் பார்த்தோமானால் ஓர் மானுடப் பிரச்னை என்கிற அளவில் கூட நம்மவர்கள் அதைப் பொருட்படுத்தியிருக்கவில்லை என்பது வேதனையான விஷயம். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல் என்ன மாதிரியானதென்கிற பிரக்ஞை நம்மில் நூற்றில் பத்து பேருக்காவது இருந்தாலும் ஆச்சரியம்தான். ஈழத்தில் தமிழர்களின் மீதான இனவெறித் தாக்குதல் உச்சத்திலிருக்கும் இன்றையத்தேதியில் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகளையும் நிலைப்பாடுகளையும் கவனித்தோமானால் அத்தனை பேரும் தங்களுக்குத் தேவையான ஏதாவதொரு சாயத்தைப் பூசிக்கொண்டிருப்பதை தெளிவாக உணரமுடியும். சிங்களவர்களுடனான இந்திய அரசின் கபட நாடகங்கள் இன்று நேற்றல்ல, 1987ல் இலங்கைக்கு அமைதிப்படையை அனுப்பிய நாட்களிலிருந்து தொடர்ந்து கொண்டிருப்பதுதான். தமிழர்களுக்கு தயக்கமின்றி இவர்கள் இழைக்கும் துரோகம் அதிகரித்தப்படியே இருக்கிறதேயொழிய எந்தச் சூழலிலும் குறைந்தபாடில்லை. உண்மையில் ஈழத்த்மிழர்களின் மிக முக்கியமான எதிரிகள் யாரும் கொழும்புவில் இல்லை. டெல்லியில்தான் இருக்கிறார்கள். இதை இவ்வளவு எளிதில் மறுத்துவிட முடியாத அளவிற்குத்தான் நமது வெளியுறவுத் துறையின் செயல்பாடுகளும் இருந்து வருகின்றன.
போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் தமிழீழம் மலர வேண்டுமெனவும் இன்று உலகம் முழுக்க போராட்டங்கள் முனைப்புடன் நடைபெற்று வருகின்றன. சிங்கள் அரசு நடத்தி வரும் இனவோழிப்பில் அழிக்கப்படுவது வெறுமனே மனிதர்கள் மட்டுமல்ல. மிக நீண்ட தொன்மங்களுடைய ஓரினத்தின் கலாச்சாரமும் வரலாறும் சேர்ந்துதான். கலாச்சாரத்தின் மீதும் வரலாற்றின் மீதும் அதீத உரிமைகளை எடுத்துக் கொள்கிற அறிவுச் சமூகம் இவ்வளவிற்கும் பிறகும் என்ன செய்து கொண்டிருக்கிறதென கவனித்தோமானால், வழக்கம்போல் நம்முடைய சாம்பார் வடை எழுத்தாளர்கள் தங்கள் பதின்பருவ காதல்களின் வலிகளைத்தான் தீவிரமாய் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். சாம்பார் வடைகளுக்கு எழுதுவது மட்டுமே தமது பிறவிப்பயனென்கிற கொள்கை கொண்ட ஜெய ஜெய சாம்பார் வடைக்கு சக எழுத்தாளர்களின் அந்தரங்கத்தை தோண்டிப் பார்ப்பதற்கே நேரம் போதவில்லை. இன்னொரு புறத்தில் தும்மினாலும் கூட உலகப் போராளிகளின், இனக் குழுக்களின் வரலாறு பக்கம் பக்கமாய் எழுதிப் பணம் பார்க்கும் ஆசாமிகள், (எழுத்தாளர்கள் என்று சொல்வது உயர்வு நவிற்சி அணியாகிவிடும்) பிரச்சனைகளுக்கு எந்த எதிர் வினையும் காட்டாமல் அடுத்து வரப்போகிற முக்கிய தமிழ் சினிமாக்காரர்களின் படைப்புகளுக்கான விமர்சனங்களை இப்பொழுதே எழுதி சரிபார்ப்பதில் தீவிரமாயிருக்கின்றனர்.
மாறாக எந்தவிதமான அரசியல், சாதிக் கட்சிகளின் சார்புமின்றியும் இலக்கிய அரசியலை பிரதிநிதித்துவப்படுத்தாமலும் தமிழ்ப் படைப்பாளிகள் சிலர், வழக்கறிஞர்கள், மீனவர்கள், மாணவர்கள், திருநங்கைகள், உழைக்கும் பெண்கள் என வெவ்வேறு அமைப்பினரை ஒருங்கிணைத்து தலைநகர் புதுதில்லியில் மாபெரும் போராட்டத்தை நடத்திவிட்டு வந்திருக்கின்றனர், கவிஞர்கள் லீனா மணிமேகலை, சுகிர்தராணி, மாலதி மைத்ரி, செல்மா பிரியதர்ஸன், கரிகாலன், யவனிகா ஸ்ரீராம், எழுத்தாளர் கோணங்கி, காலபைரவன், அஜயன் பாலா, லஷ்மி சரவணக்குமார், நரன், லிவிங் ஸ்மைல் வித்யா என படைப்பாளிகளோடு மற்ற அமைப்பினரையும் சேர்த்து நூற்றியிருபது பேர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக் கழக தமிழ் மாணவர்களும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும் படைப்பாளிகளுடன் இணைந்து இப்போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தனர்.
தலைநகரில் இவர்கள் நடத்திவிட்டு வந்திருக்கிற போராட்டங்கள் அரசியல் தளத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தி விட்டிருக்கிறது என்பதை இங்கிருக்கும் பலரும் கேட்டதாக அறிகிறேன். முதலில் என்ன விதமான போராட்டங்கள் நடந்தன என்பதையும் களத்தில் நிகழ்ந்தவைகளையும் சுருக்கமாகச் சொல்லிவிடுதல் நலம் எனத் தோன்றுகிறது. உடலையறுக்கும் டெல்லியின் குளிரில் இத்தனை பேரைக் கூட்டிச் சென்று என்ன விதமான போராட்டங்களை நடத்தப் போகிறார்கள் என்கிற ஐயம் வந்திருந்த பலருக்கும் இருந்தது. பிறகுதான் ஒரு விஷயத்தை நேரடியாக உணர முடிந்தது. போராட்டக் களத்தை மட்டும் தெளிவாகத் தீர்மானித்து விட்டால் செயல்பாடுகளை நேரமும் சூழலும் தாங்களே தீர்மானித்துக் கொள்வதுடன் தீவிரத்தையும் ஏற்படுத்திக் கொண்டுவிடுகிறது. மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதம், மாபெரும் பேரணிகள், பாராளுமன்ற முற்றுகை, மொட்டையடிக்கும் போராட்டம், இலங்கைத் தூதரக முற்றுகை, ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு, இறுதியாக ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் மாபெரும் பேரணியும் கலை நிகழ்ச்சிகளும் என பல்வேறு கட்டங்களாக நடந்த போராட்டத்தில் முக்கியத்துவமற்றவைகளென்று எந்தவொரு நிமிடத்தையும் சொல்லிவிட முடியாது. ஒவ்வொருவரும் தங்களது பங்கிற்கு போட்டி போட்டு களத்தில் வேலை செய்ததை மறுக்க முடியாது. கவிஞர்கள் லீனா மணிமேகலை, சுகிர்தராணி, மாலதி மைத்ரி இவர்களோடு சேர்த்து டெல்லி மாணவர்களின் அசாத்தியமான உழைப்பைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லியே ஆகவேண்டும்.
பாராளுமன்றக் கூட்டத் தொடர் துவங்கிய வேளையில் இவ்வளவு பெரியதொரு போராட்டத்தை ஒருவரும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான். அதன் அதிர்வுகளை போராட்டப் பந்தலுக்கு வந்து பேசிச் சென்ற தமிழக, புதுச்சேரி பாராளுமன்ற உறுப்பினர்களின் உரையில் உணர முடிந்தது. சிப்பிப் பாறை ரவிச்சந்திரன், கு. ராமதாஸ், ஏ.கே. மூர்த்தி ஆகியோர் உண்ணாவிரதத்தை வாழ்த்திப் பேசினார்கள், பா.ம.க. உறுப்பினர் கு. ராமதாஸ் பேசியபோது, ‘இத்தனை நாட்களாக ஈழப் பிரச்சனையைப் பற்றி பேசுவதற்கு சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இன்று நீங்கள் வந்து போராடியிருப்பதன் விளைவாய் அனுமதி கிடைத்திருக்கிறது’ என்று சொன்னதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா, தேசிய மாதர் சம்மேளத்தின் பொதுச் செயலாளர் ஆனி ராஜா, மனித உரிமைகளுக்காக தொடர்ந்து எழுதி வருபவரும் இங்கிலாந்து நாட்டிற்கான முன்னால் வெளிநாட்டுத் தூதுவருமான குல்தீப் நாய்யார், சச்சார் அறிக்கையைத் தந்த ராஜேந்திர சச்சார் இவர்களோடு சேர்ந்து மிக முக்கியமாக யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜி லிங்கத்தின் உரையையும் சொல்ல வேண்டும். ஈழத்தில் இந்திய அரசின் போர் நிலைப்பாடு குறித்தும் இலங்கை அரசியல் குறித்தும் அவர் பேசியதற்குப் பின்பாக வேறு சில விஷயங்களையும் இப்போது யோசிக்கத் தோன்றுகிறது. 1987 இந்தியா – இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு திருகோணமலையின் எண்ணெய்க் கிணறுகளை இந்தியா பெற்றிருப்பதோடு அங்கு அனல் மின் நிலையம் ஒன்றையும் உறுவாக்க ஒப்புக் கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணம், காங்கேசன்துறை சிமெண்ட் தொழிற்சாலை, தகவல் தொழில்நுட்ப முதலீடு என பொருளாதார முதளிடுகளிலும் நமது மத்திய அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது. இலங்கையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதன் மூலம் இப்பிராந்தியத்தில் தன்னை வலுவானதொரு அதிகார மையமாய் நிறுவிக் கொள்ள முடியும் என்கிற உறுதி இருப்பது தெளிவு. இந்திய அரசின் இந்த எண்ணவோட்டத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்ட இலங்கை அரசாங்கம் இயன்றவரை தங்களுக்குச் சாதகமானவைகளை நிவர்த்தி செய்து கொள்ளும் நடவடிக்கைகளில் தீவிரமாயிருக்கிறது. குருதி ஓடும் ஒரு நிலத்தில் ஏராளமான உயிர்களைக் காவு வாங்கிய திருப்தியோடு தனது நலன்களைச் சாதித்துக் கொள்ளும் முனைப்பிலேயே இரண்டு அரசாங்கங்களும் இருக்கிறதேயொழிய அப்பாவி மக்களின் நலன்களைப் பற்றிய எந்தவொரு கவலையும் இவர்களுக்கில்லை.
முக்கியத்துவம் மிகுந்த உலகின் பல புரட்சிகளில் மாணவர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் அசாத்தியமானதொரு பங்கிருக்கிறது. இன்று தமிழகம் முழுக்க தன்னெழுச்சி பெற்றிருக்கும் போராட்டங்களையும் அதுபோன்ற ஒன்றாகவேதான் பார்க்க முடிகிறது. போராட்டப் பந்தலிலும் தூதரகத்தை முற்றுகையிடுதலிலும் மொட்டையடிக்கும் போராட்டத்தின் போதும் இவர்கள் காட்டிய தீவிரத்தையும் கட்டற்ற தன்னையையும் வெறும் சொற்களால் எழுதித் தீர்த்துவிட முடியாது. மூன்றாவது நாள் ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்துகையில் பிற மொழி மாணவர்களிடமும் நம்முடைய போராட்ட வேட்கை பரவியிருந்தது. முத்துக்குமாரின் கடைசிக் கடிதத்தை வெறுமனே கடிதமாக மட்டுமே அணுகாமல் மிக முக்கியமான அரசியல் பிரதியாகத்தான் அணுக வேண்டும். அவ்வளவு தூரத்திற்கு அக்கடிதத்தின் வரிகள் மாணவர்களின் மனங்களில் எழுச்சியைத் தோற்றுவித்திருக்கிறது.
‘நீ இறந்துவிட்டாலுங்கூட வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய் ஒரு வரலாறாக, ஒரு போராட்டமாக. ஒரு நம்பிக்கையாக . . .’ என்கிற அல்ஜீரியப் பாடகன் மத்தூப்பின் வரிகளைத்தான் இச்சமயத்தில் நினைத்துப் பார்க்க முடிகிறது. மூன்று நாட்களும் பறையிசையையும் பாடல்களையும் நிகழ்த்திய புத்தர் கலைக்குழுவினரின் பங்கு மிக முக்கியமான ஒன்று. ஈழத்தமிழர் தோழமைக் குரலின் இந்தப் போராட்டங்கள் தில்லியை தொடர்ந்து தமிழக முழுக்கவுள்ள மாவட்டங்களிலும் தேசத்தின் பிற மாநிலங்களிலும் விரிவடையவிருக்கிற இந்த வேளையில் பெருந்திரளான மக்கள், அமைப்புகளைக் கடந்து வந்து இணைய வேண்டும். ஒரு இனத்தை முற்றாக அழித்தொழிக்க முயற்சிக்கும் இந்திய, சிங்கள அரசுகளின் வன்முறையை வேடிக்கை பார்த்தபடியிருப்பதைத்தான் ஆறு கோடித் தமிழர்களும் தொடர்ந்து செய்யப்போகிறார்களா? அல்லது முழுமையாகக் களத்திலிறங்கி தமிழீழத்துக்காகக் குரல் கொடுக்கப் போகிறார்களா? என்பதற்கு மிக விரைவாகவே பதில் கிடைத்தாக வேண்டும்.

1 comment: