Sunday, April 12, 2009




ஈழத் துயரம் எல்லோர் குரலிலும்
- பிரேம்
(குமுதம் தீராநதி – மார்ச் 2009 இதழின் பதிவுகள் பகுதி)





சம உரிமைக்கான குரலாகத் தொடங்கி இன விடுதலைக்கான தற்காப்புப் போராட்டமாகத் தீவிரமடைந்து தனி நாட்டுக்கான போராக மாறி பல்வேறு இழப்புகளுக்குப் பின் தற்போதைய இனத்துடைத்தழிப்பு எனும் கொடூர நிலையை அடைந்து நிற்கும் ஈழ நிலத்தின் துயரம் பல ஆண்டுகளாகத் தமிழர்களின் மறதிக்குள் புதைந்து போனதாக இருந்தது. இலங்கை அரசு என்பது சிங்கள மக்களுக்கான அரசு மட்டுமே எனத் தன்னை மாற்றிக் கொண்டதுடன் தமிழர்களை அழிப்பதையே தனது திட்டமாகவும் வைத்திருக்கும் கொடுமை பேசப்படாத ஒஅன்றாக தமிழகத்தில் மாறிவிட்ட நிலை ஒரு பெரும் இனத்துயர்தான். ஆனால் மீண்டும் ஆயிரக்கணக்கில் ஈழத்தமிழர்கள் கொல்லப்படுவதும் தமிழர் வாழும் சிறு நிலப்பகுதி மீது நேரடிப் போரை இலங்கை அரசு நடத்துவதும் இந்தக் கொடிய மவுன நிலையைக் கலைத்தது, தற்போது தமிழகத்தில் ஈழத்துயரம் மெல்ல உணரப்பட்டு வருகிறது.
உரிமை கேட்கும் மக்கள் மொத்தமாக அழிக்கப்பட் எந்த அரசியல் அறம் இடம் கொடுக்கிறது? என்ற கேள்வியை எழுப்பாமல் ‘பயங்கரவாதம்’ ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஒரு பொது ஆதிக்கக் கருத்தை ஈழ மக்கள் படுகொலையிலும் முன்வைத்து அமைதி காக்கும் ஒரு நிலை வேறு இனங்களுக்கு ஏற்பட்டு இருக்காது என்பது மட்டும் உண்மை.
இலங்கை அரசு சில லட்சம் தமிழ் மக்களைக் கொன்று குவித்து ஒரு அமைதியை ஏற்படுத்த தேவை என்ன என்பது பற்றித் தமிழ்ச் சமூகம் முழுமையும் கேள்வி எழுப்பி போர் நிறுத்தம் செய்ய என்னவெல்லாம் போராட்டம் எடுக்க வேண்டுமோ அனைத்தையும் எடுத்திருக்க வேண்டும். ஒரு இனத்துயரம் கவிந்து இருக்க வேண்டும். ஆனால், இவை எதுவும் நடக்காத ஒரு சூழலில் மாணவர் போராட்ட்ங்களும் அதனைத் தொடர்ந்த முத்துக்குமாரின் தீக்குளிப்பும் ஒருவித அதிர்வை ஏற்படுத்தி உள்ளன. மீந்திருக்கும் ஈழத்தமிழர்கள் அடைந்து வரும் சொல்லுக்குள் அடங்காத வலியும் துன்பமும் இந்நேரம் தமிழகம் கடந்து இந்திய தேசம் முழுவதும் ஒரு கவன அழுத்தமாக மாறி இந்திய ராணுவ உதவியுடன் இலங்கை அரசு நிகழ்த்தும் இனப்படுகொலை போர் நிறுத்தப்படுவதற்கான அழுத்தங்கள் உருவாகி இருக்க வேண்டும். பிற திட்டமிடல்களும் போச்சுவார்த்தைகளும் விவாதங்களும் அதற்குப்பினே நடந்திருக்க வேண்டும். இவை எல்லாம் நடக்கத் தமிழ்ச் சமூகம் ஈழ அவலத்தை தந்து அவலமாகக் கொண்டு வலிமையான போராட்டங்களை சனநாயக அடிப்படையில் செய்திருக்க வேண்டும். ஆனால் ஈழத்துயரம் எமது துயரம் அல்ல என்பதான ஒரு வெகுமக்கள் மனப்பான்மை இறுகிப்போய், ஈழ மக்கள் தோழமைக் குரல் என்பது ஒரு விளிப்பு நிலைக் குரலாகவே இருந்துவரும் சூழலில், ஒரு கூட்டுக் குரலாக ‘ஈழத் தமிழர் தோழமைக்குரல்’ என்னும் அமைப்பு ஒரே குரலில் போரை நிறுத்து என்ற கதறலுடன் ஒரு முன்னெடுப்பைச் செய்துள்ளது. மதிமுக, பாமக, தமிழ்நாடு விடுதலைச் சிறுத்தைகள் என அரசியல் கட்சிகள் எடுக்கும் போராட்டங்கள் ஒன்று திரண்ட விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் எனில் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் என் வேறுபட்ட கொள்கைகள் உடைய, சில வகைகளில் முரண்பாடுகள் உடைய குழுக்கள்கூட ‘ஈழத் தமிழர் துயர்’ நீக்கும் இயக்கமாக தொடர்ந்து இணைந்தும் தனித் தனியாகவும் குரல் கொடுக்கவும் போராடவும் வேண்டிய தேவை உள்ளது.
அவ்வகையில் ‘ஈழத்தமிழர் தோழமைக்குரல்’ என்ற இயக்கம் மாணவர் கூட்டமைப்பு, படைப்பாளிகள், கலைஞர்கள், மனித உரிமைப் போராளிகள், பெண்கள் அமைப்பினர், பத்திரிக்கையாளர்கள், திருநங்கைகள், தகவல் தொழில் நுட்ப வல்லுநர்கள், வழக்கறிஞர்கள், உழைக்கும் மக்கள், மீனவர் அமைப்புகள் என பல வடிவான அடையாளங்களுடன் ஆனால் ஒரே குரலில் ‘போரை நிறுத்து, போரை நிறுத்து, ஈழத்தமிழரைக் கொன்று குவிக்கும் இனப்படு கொலைப் போரை நிறுத்து’ என தலைநகர் டில்லியில் மூன்று நாட்கள் தனது குரலை உரத்து ஒலித்து, பெண்ணியப் படைப்பாளிகளின் முன்னெடுப்பிலும் வழிகாட்டுதலிலும் இப்போராட்டம் நிகழ்த்தப்பட்டதென்பது ஒரு வரலாற்றுப் புள்ளி.
பிப்ரவரி 12ஆம் தேதி காலை டில்லி மண்டி அவுசில் திரண்ட போராட்டக் குழுவில் தமிழகத்தில் இருந்து திரண்ட போராட்டக் குழுவில் தமிழகத்தில் இருந்து வந்த 100 இயக்க உறுப்பினர்களுடன் டில்லியின் மாணவர்கள், வழக்குரைஞர்களும் இணைய ஊர்வலம் தொடங்கி ஈழத்தமிழரின் கோபத்தை உணர்த்தியபடி பாராளுமன்ற சாலை நோக்கி நகர்ந்தது. ஜந்தர் மந்தர் பகுதியில் மூன்று நாட்கள் உண்ணாநிலைப் போராட்டமும் ஒரு நாள் மறியலும் செய்வதென போராட்டக் குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ‘இந்தியா ஆயுதம் வழங்க இலங்கை இனப்படுகொலை செய்யும்’ கொடூரத்தை ஒவ்வொருவரும் கொதிப்புடன் உணர்த்தியபடியே இருந்தனர். புத்தர் கலைக்குழுவினர் பறை இசையும் சமர்ப்பா குமரன் பாடல்களும் கோபத்தையும் துயரத்தையும் ஒலித்தப்படியே இருந்தன. ஈழத்து அரசியல் வரலாறும் உரிமைப்போரின் தேவையும் தொடர்ந்து விளக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. அமைப்பாளர்களான மனித உரிமை அமைப்பு பொன். ச்ந்திரன், மாணவர் கூட்டமைப்பு வெங்கடாசலம், தென்னிந்திய மீனவர் நல சங்கம் பாரதி, புதுச்சேரி மீனவப் பெண்கள் அமைப்பு விமலா பெரியாண்டி, லீனா மணிமேகலை, மாலதி மைத்ரி, சுகிர்தராணி போன்றோர் ஒவ்வொரு நகர்வையும் கலந்தாலோசித்து நிகழ்த்திக் கொண்டிருந்தனர். எழுத்தாளர் கோணங்கி தலைமையில் படைப்பாளிகள் தமது பங்கை அளித்தனர்.
13ஆம் தேதி இரண்டாம் நாள் உண்ணாநிலைப் போராட்டத்தில் அமர்ந்த ஈழத்தமிழர் தோழமைக்குரல் குழுவினரை ஊக்குவித்தும் போரை நிறுத்த் வலியுறுத்தியும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ராமதாஸ்(PMK), து. ராஜா(CPI) ஆகியோர் பேசினர். இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்கள் ஈழத்தமிழர் நிலை பற்றி விரிவான ஒரு உரையை நிகழ்த்தியது கேட்போரை கண்கலங்க வைத்தது. மதிமுக கட்சியினர் 3000 பேருக்குமேல் அன்று வைகோ தலைமையில் உண்ணா நிலைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஈழத்தமிழர் தோழமைக்குரல் போராட்டக் குழுவினரை ஊக்குவித்து அக்கூட்டத்திலும் தலைவர்கள் பேசினர்.
இதற்கிடையில் லீனா மணிமேகலை, மாலதி மைத்திரி, இன்பா சுப்பிரமணியன் தலைமையில் 28 பேர் கொண்ட எழுத்தாளர்கள், மாணவர்கள், மனித உரிமை இயக்கத்தினர் குழு ஒன்று வேறு வடிவில் போராட்டம் ஒன்றை நிகழ்த்த இலங்கைத் தூதரகம் நோக்கி ஐந்து சிற்றுந்துகளில் சென்றனர்.
ஏதாவது ஒரு வகையில் தமது எதிர்ப்பை, அடக்க முடியாத கோபத்தைக் காட்ட அனுமதி இல்லாத அந்த இடத்தை நோக்கிச் சென்ற அவர்கள் இலங்கைத் தூதரகத்தின் முன் வண்டியை நிறுத்தி கூட்டமாகப் பாய்ந்து சென்று எதிர்ப்பு வாசகங்களை எழுப்பியபடி ராஜபக்சேவின் உருவ பொம்மையை எரிக்கத் தொடங்கினர். பெண்கள், ‘ராஜபக்சே, நான் உன் தாய். என்னைக் கற்பழி, ராஜபக்சே, நான் உன் சகோதரி. என்னைக் கற்பழி, ராஜபக்சே, நான் உன் மகள். என்னைக் கற்பழி,’ என்ற வாசகங்களை எழுதிய துணிகளை ஏந்தி கூக்குரல் எழுப்பினர். இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கும் என்பதை எதிர்பாராத காவல்துறையினர் போராட்டக் குழுவினரைச் சூழ்ந்து கொள்ள, மேலும் காவல் படையினர் அங்கு விரைந்தனர். தமது போராட்ட நேரத்தை நீடிக்க வேண்டி குழுவினர் சாலையில் படுத்து மறியல் செய்தனர். தொலைக்காட்சி, பத்திரிக்கை ஊடகத்தினர் அனைத்தையும் பதிவு செய்ய, காவல் துறையினர் போராட்டக்காரர்களை காவல்துறையின் இரு வண்டிகளில் இரு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு செல்ல முயன்றனர். போராட்டக் குழுவினர் அதனை மறுத்து ஒரே குழுவாகத்தான் செல்வோம் என வலியுறுத்தினர். அதேபோல பெண்களைக் கைது செய்ய பெண் காவலர்கள் வேண்டும் என வலியுறுத்தி அதற்கும் ஏற்பாடுகளைச் செய்தனர். ஒரே நேரத்தில் இரு குழுவாக ராஜபக்சே உருவ பொம்மை எரிப்பு, இலங்கைத் தூதரகம் முன் எதிர்ப்பு குரல் எழுப்புதல் என்ற இரு போராட்டங்களை நிகழ்த்திய நிறைவுடன் 28 பேரைக் கொண்ட போராட்டக் குழுவினர் கைதாகி காவல் நிலையத்திற்குச் சென்றனர்.
உண்ணா நிலைப் போராட்டத்தில் இருந்த தோழர்கள் கைதானவர்களை விடுதலை செய்யக் கோரி வேறு ஒரு போராட்டத்தில் மறுநாள் நடத்தத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அன்று இரவு கைதான 28 பேரும் விடுவிக்கப்பட்டனர். எழுத்தாளர்கள், மாணவர்கள், மனித உரிமைப் போராளிகள் இணைந்து எப்படி இது போன்ற ஒரு போராட்டத்தை செய்தீர்கள்? உங்களுக்குப் பின்னால் பெரிய ஒரு மக்கள் இயக்கம் இருக்கிறதா? என காவல் துறையினர் விசாரணையின் போது கேட்டுள்ளனர். இது பெரும் மக்கள் எழுச்சி ஒன்றின் தொடக்கம் என்பது அவர்களுக்குப் புரிந்துள்ளது.
14ஆம் தேதி நடந்த உண்ணா நிலைப் போராட்டம் இந்தப் போராட்ட எழுச்சியை ஈழத்தமிழர் துயரம் நீங்கும் வரை எப்படிக் கொண்டு செல்வது என்பது பற்றிய ஆலோசனைப் பேச்சால் நிரம்பி இருந்தது.
ஈழத்துயர் சொல்லவந்த எல்லோர் குரலிலும் ஏதோ ஒரு கட்டத்தில் உடைந்து கண்ணீரால் நிரம்பியதும், தீக்குளிக்கவும், தீமூட்டவும் கொண்டு செல்லும் ஒரு மனநிலை இறுக்கமும் அடுத்தத் தலைமுறை வேறு ஒன்றாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதைக் காட்டியது. பெண்களின் தலைமையில் தவிர்க்க முடியாத வேறு ஒரு வகை எதிர்ப்பு அரசியல் களம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது ‘ஈழத் தமிழர் தோழமைக் குரல்’ திட்டமிடப்பட்ட விதத்திலும் செயல்பட்ட வகையிலும் காட்டித் தந்திருக்கிறது. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு வீதியிலும் ஈழத் தமிழரின் துயரம் செய்தியாக, தகவலாக இல்லாமல் தமது வாழ்வின் ஒரு துயரமாகப் படிந்து பரவிச் செல்லும்போது மாற்றம் எப்படியும் எதோ ஒரு வடிவில் வந்துசேரும் என்பதுதான் இப்போது நினைவில் மீந்திருக்கிறது.

No comments:

Post a Comment