இந்திய அரசே
இலங்கை இனப்படுகொலைப் போரை தடுத்து நிறுத்து!
ஈழ மண்ணில் இன அழிப்புப் போர் உக்கிரமடைந்து வருகிறது. நான்கு இலட்சம் மக்கள் முல்லைத்தீவின் குறுகிய நிலப்பரப்பிற்குள் முடக்கப்பட்டுள்ளனர். காடுகளிலும் வயல்வெளிகளிலும் நெருக்கடி மிகுந்த ஆபத்தான வாழ்க்கையை அவர்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். சிங்கள ராணுவம் பன்னாட்டுப் போர் விதிகளை மீறி மருத்துவமனைகள், பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், அகதி முகாம்கள் மீது குண்டுகள் வீசி வருகின்றது. சர்வதேச சமூகத்தால் போரில் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ள க்ளஸ்டர் குண்டுகள், இரசாயன குண்டுகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் மிலிபன்ட், மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு இயக்குநர் பிராட் ஆடம்ஸ், ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வெய்ஸ் எனப் பலரும் இலங்கையில் நிகழும் இனப் படுகொலையை வன்மையாகக் கண்டித்தும் கூட, இனவெறி இராசபக்சே அரசின் பயங்கரவாதச் செயல்பாடுகள் நின்றபாடில்லை.
இந்த இனப்படுகொலைப் போரில் இதுவரை ஒரு இலட்சம் அப்பாவித் தமிழர்கள் இறந்திருக்கின்றனர். மூன்று இலட்சம் தமிழர்கள் காணாமல் போயிருக்கின்றனர். ஒன்றேகால் இலட்சம் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக்கப்பட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இலங்கைச் சிறையில் அரசியல் கைதிகளில் 99 விழுக்காட்டினர் தமிழர்கள்.
''வியட்நாமில் அமெரிக்கப்படைகள் வீசிய குண்டுகளை விடவும் ஈழத்தமிழர் பகுதிகளில் சிங்களப்படைகள் வீசிய குண்டுகள் அதிகம்'' என வாக்குமூலம் தருகிறார் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.
இத்தகைய நிலையில்தான் 'இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்து' என தமிழக மக்கள் உரக்க குரல் எழுப்பி வருகின்றனர். ஆனால், இந்திய அரசு சிறிதும் ஈவு இரக்கமின்றி இக்கோரிக்கையை புறக்கணித்து வருகிறது. போரை நிறுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபடவில்லை எனும் வேதனை ஒருபுறம் என்றால் ஈழத்தமிழர்களை அழித்தொழிக்க போர் பயிற்சி, ஆயுத உதவி என மறுபுறம் இலங்கை அரசுடன் பங்காளி உறவு கொண்டாடுகிறது இந்திய அரசு.
இந்தியாவின் ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்டவர்கள் தமிழர்கள். பல்வேறு துறைகளில் இதன் வளர்ச்சிக்கு தொடர்ந்து உழைத்து வருபவர்கள் தமிழர்கள். இத்தமிழர்களோடு மொழி, இன, பண்பாட்டு உறவுகள் கொண்டவர்கள்தாம் ஈழத் தமிழர்கள். சொந்த சகோதரர்கள் சாதல் கண்டு தமிழகத்து மக்கள் இன்று சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதன் விளைவுகள், இன்று தமிழக வீதிகளிலெல்லாம் நடைபெறும் தன்னெழுச்சியான போராட்டங்கள். அவர்களது நியாயமான கோபங்களை தலைநகர் தில்லியில் பிரதிபலிக்கும் முயற்சிதான் தமிழக மாணவர்கள், படைப்பாளிகள், மனித உரிமை ஆர்வலர்கள் ஒன்றிணைந்த 'ஈழத் தமிழர் தோழமைக் குரல்'.
இந்திய தேசிய அறிவு ஜீவிகளே, இந்திய ஒன்றியத்தின் அனைத்து இனங்களைச் சேர்ந்த மாணவர்களே, விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களே, பத்திரிகைத்துறைத் தோழர்களே,
ஈழத் தமிழர் அனுபவிக்கும் அரச பயங்கரவாதத்தை புரிந்து கொள்ளுங்கள். அவர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு அளியுங்கள்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய அரசிடம் மேலதிக வலிமையான குரலில் மீண்டும் கேட்போம்.
இந்திய அரசே!
இலங்கையில் நடைபெறும் இனப்படுகொலைப்போரை உடனே தடுத்து நிறுத்து!
தமிழீழ மக்களின் வாழ்வுரிமையை, இந்தியாவில் வாழும் அகதிகளின் மாண்புரிமையை உறுதி செய்!
கொல்லப்பட்ட தமிழ் மீனவர்களுக்காக இலங்கை அரசின் மீது உடனடியாக நடவடிக்கை எடு!
ஈழத் தமிழர் தோழமைக் குரல்
தமிழ்நாடு, புதுச்சேரி, புது தில்லி
ஒருங்கிணைப்புக் குழு:
லீனா மணிமேகலை, சுகிர்தராணி, செல்மா பிரியதர்ஸன், கரிகாலன், அஜயன் பாலா, யாழன் ஆதி, யவனிகா ஸ்ரீராம், கோணங்கி, இன்பா சுப்பிரமணியன், லிவிங் ஸ்மைல் வித்யா, அசதா, காலபைரவன் (தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்)
வெங்கடாசலம் (அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு, தமிழ்நாடு)
மாலதி மைத்ரி (அணங்கு)
சந்திரன் (மக்கள் சிவில் உரிமைக் கழகம்)
கலையரசன் (தில்லி தமிழ் மாணவர் கூட்டமைப்பு)
பிரேமா ரேவதி (பெண்கள் சந்திப்பு)
கே.டி. காந்திராஜன், நடராஜன் (ஓவியர்கள் இயக்கம்)
பாரதி (தென்னிந்திய மீனவர் நலச் சங்கம்)
விமலா பெரியாண்டி (புதுச்சேரி மீனவப் பெண்கள் கூட்டமைப்பு)
புத்தர் கலைக் குழு, விழுப்புரம்
போராட்ட நிகழ்வு
நாள்: 12.02.2009 இடம்: புதுதில்லி
காலை 10.00 பேரணி ஜந்தர் மந்தரிலிருந்து பாராளுமன்றம் வரை
காலை 11.00 பாராளுமன்றம் முன் முற்றுகைப் போராட்டம்
காலை 12.00 முதல் ஜந்தர் மந்தரில் உண்ணாநிலைப் போராட்டம்
Monday, February 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment